இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் கைச் சின்னத்தில் போட்டியிட்ட திமுக காங்கிரஸ், வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.  எதிர்த்து இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக தோல்வியைத் தழுவிக் கொள்ளப் போகிறது. தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக அனுமதித்துள்ள தொகை என, சிறிய மாநிலங்களுக்கு ரூ 28 லட்சம், பெரிய மாநிலங்களுக்கு ரூ40 லட்சம் என்று வரையறை செய்துள்ளது. இரு கழகங்களும், இந்தத் தொகுதியில் செலவழித்து உள்ள மொத்தத் தொகை 300 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு சேலை, வேட்டி, சட்டை, காமாட்சி விளக்கு, குக்கர், கொலுசு, அறிதிறன் கைக்கடிகாரங்கள் என்று எண்ணற்ற பரிசுப் பொருட்கள், ஆட்டுக்கறி, கோழிக்கறி, காய்கறித் தொகுப்பு அறுசுவை அசைவ உணவு என்று பலத்த கவனிப்பு நடந்திருக்கிறது; நீலம், ஆரஞ்சு, பச்சை, வாடாமல்லி வண்ணத் தாள்கள் வழங்கப்பட்டு உள்ளன. மக்களை மனம் குளிர வைத்து, அவர்களிடம் இருக்கும் வாக்குகளைப் பறித்திட இரண்டு கழகங்களுக்கும் இடையே போட்டா போட்டி தான் இருந்தது. மக்களுக்கும் தங்கள் வாக்குகளை விற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. மக்களுக்குப்  புரை ஏறும் அளவுக்கு உபசரிப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. தேர்தல் நேரக் கரிசனங்களுக்கு இதுவரை திருமங்கலம் வழிமுறையே வழிகாட்டியாக இருந்தது. ஆனால் அந்த முறை, பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஈரோடு கிழக்கு வழிமுறை முன்னணியில் வந்துவிட்டது.

மக்களை, மாக்களாகக் கருதி அடைப்புகளுக்குள் அடைத்து வைத்துக் காவல், காவல் காலகட்டத்தில் சிற்றுண்டிகள், நொறுக்குத் தீனிகள், பொழுதுபோக்கு வசதிகள்,  பட்டிக்குள் வரும்போதும், பட்டியை விட்டு வெளியேறும்போதும் சிறப்பு நிதி அளித்தல் என்றெல்லாம் அலங்கோலங்கள் அரங்கேறி முடிந்துள்ளன. தேர்தல் விதிமுறைகள்  மீறப்பட்டுள்ளதை தொகுதியில் உள்ள பச்சிளம் குழந்தைகளே எடுத்துரைப்பர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களோ, மௌனப் பார்வையாளர்களாகப் பவனி வந்தனர். தொகுதியில் முகாமிட்டிருந்த பெருமக்கள் அனைவரும் மாமூல் வாழ்க்கையைத் தொடர்ந்திட, தங்களது இருப்பிடங்களை நோக்கித் திரும்பியுள்ளனர்.

‘கொள்ளை அடிப்பது உனக்குத் தான் – அப்படி கொள்ளை அடிப்பதில் எனக்குப் பங்கு கொடு’ என்ற ஒரு விஷச் சூழல் உருவாகிவிட்டது. ‘தேர்தலில் வெற்றி பெறத் தேவையில்லை, சேவை மனப்பான்மை; பணமும், பரிசுப் பொருட்களும் அவற்றைக் கொண்டு சேர்க்க வலுவான விநியோகப் பின்னலுமே இன்றைய தேவை’ என்ற அளவிற்கு மக்களாட்சிக் கோட்பாடுகள் மலினம் அடைந்து போய்விட்டன என்பதை காமராஜர் மக்கள் கட்சி ஆழ்ந்த வருத்தத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறது. இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை!                                                                    

அன்புடன்

பா குமரய்யா

மாநிலப் பொதுச் செயலாளர்,  

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *