வழக்கம் போல் ஏமாற்றாதீர்கள்!
சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்ற கழக அரசின் செயற்பாட்டின் உண்மை நிலையை, ஆசிரியர்கள் போராட்டம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக, மக்களிடம் இருந்து வாக்குகளைத் தட்டிப் பறிப்பதற்காக பல வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன.

அவற்றில் ஒன்றான வாக்குறுதி எண் 177யை(2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு, தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை) நிறைவேற்றுதல், தற்காலிகப் பணி ஆசிரியர்களை நிரந்தரம் செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கல்வி அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என்று அறிவித்ததை ஏற்றுக் கொண்டு, தங்கள் போராட்டத்தை அவர்கள் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடந்த போது, கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அரசு கொடுத்த வாக்குறுதியை தற்போதாவது நிறைவேற்றும் என்று நம்புவோமாக அல்லது வழக்கம் போல் ஏமாற்றிவிட்டு மீண்டும் அவர்களை போராட்டக் களத்தில் குதிக்கச் செய்வதும், செய்யாமல் இருப்பதும் அரசின் கைகளில் தான் உள்ளது.


இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்கு அரசிடம் இருந்து உரிய தீர்வு கிடைக்கப் பெறாததால், அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். போராட்ட காலத்திற்கான அனுமதி முடிவடைந்து விட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களைக் கைது செய்து, அடிப்படை வசதிகளற்ற இடங்களில் அடைத்து வைத்துள்ளது திமு கழக அரசு. அவர்களைக் கண்ணியமான முறையில் நடத்துவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
