நான் பல கட்சிகளுக்குப் படையெடுத்தவன் இல்லை இன்று இங்கே யாரும் பெரியாரில்லை

இனிய சுபவீ,

நீங்கள் என் பதிவை வெளியிடுவதில் எந்த மறுப்புமில்லை. நந்தன் இதழ் காலந்தொட்டு உங்களை நான் அறிவேன். உங்கள் மீது, உங்கள் உரைவீச்சின் மீது எப்போதும் எனக்கு உயர் மதிப்புண்டு.

இன்று இங்கே யாரும் பெரியாரில்லை. பெரியார் காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என்று பெயர்ப் பலகைகளை மாற்றினார்: கொள்கையை மாற்றவில்லை. கண்ணீர்த் துளிகளின் கபட அரசியலை எதிர்த்துக் காமராசரைப்
போற்றினார். ஆனால் 1967 தேர்தலுக்குப் பின்பு அண்ணாவின் சந்திப்பில் நெகிழ்ந்து காமராசர் கண் மூடுவதற்கு முன்பே
தன்னுடைய நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டார். ஆனால் எதையும் சுயநலத்திற்காக அவர் செய்யவில்லை என்ற புரிதல் எனக்குண்டு.

நான் பல கட்சிகளுக்குப் படையெடுத்தவன் இல்லை.

காங்கிரசில் மாணவப் பருவத்தில் இணைந்த நான் அதன் உட்பூசலில் உருமாற்றம் பெற்ற அமைப்புகளிலேயே என் பங்களிப்பைத் தந்திருக்கிறேன். அரசியலை வைத்துப் பிழைக்கும் அருங்கலையை அறியாதவன் நான். சொல்லப்போனால் சுயஒழுக்கத்தில் நான்தான் பெரியாரின் உண்மையான வாரிசு. மற்றபடி அவர் பாதை வேறு. என் பயணம் வேறு.

நீங்கள் சனாதனத்தையும் வர்ணாசிரமத்தையம் வேறுபடுத்திப் பார்க்கப் பழகவில்லை. நான் வர்ணாசிரமத்தை ஏற்காதவன். ஒருமையை எல்லா நிலைகளிலும் வலியுறுத்தும் சனாதனத்தைப் போற்றுபவன் நான். உங்கள் கொள்கைப் பிடிப்பை வியப்பவன் நான். உங்கள் அன்பை சிதைத்துவிடாத அறிவை நேசிப்பவன் நான்.

சில நிர்ப்பந்தங்களால் என்னைக் கடுமையாக விமர்சிக்க நேர்ந்தாலும் உங்கள் மீது நான் பூண்டிருக்கும் உயர்மதிப்பினால் எப்போதும் எதிர்வினை ஆற்றமாட்டேன்.

No argument is necessary for one who believes in God. Any argument is not sufficient for one who does not believe in God என்பது டால்ஸ்டாயின் கருத்து. என் கருத்தும் அதுவே.

இனி எந்தப் பதிவையும் உங்களுக்குப் போடமாட்டேன். அன்பு வாழ்வின் சாறு; வெறுப்பு மரணத்தின் சீழ் என்கிறது மிர்தாதின் புத்தகம். சமூக நலனுக்காக அறம் வழுவிய கழகங்களை அப்புறப்படுத்த நினைக்கிறேன்.

எந்த மனிதரையும் நான் வெறுக்கவில்லை. எங்கு சந்திக்க நேர்ந்தாலும் உங்களை நான் அன்புடன் தழுவிக்கொள்வேன். தான் நம்பும் கொள்கையை இந்த மண்ணில் மேலும் வலிமையாகப் பரப்புவதற்கு என் நண்பர் சுபவீ உடல் நலத்துடன் நூறாண்டு கடந்தும் வாழ நான் நம்பும் இறையருளைப் பிரார்த்திக்கிறேன்.

நிறம் மாறா நட்புடன்
தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *