துக்ளக் அரசு நினைவுக்கு வருகிறது

அவசரகதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் தொடங்கி வைத்துவிட்டு அந்த கட்சித் திட்டம் என்று இன்றைக்கு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்கள், குறைகள் இருந்தால் சொல்லுங்கள், தீர்த்து வைக்கிறோம் என்கிறார்கள். முதல்வரும் இதே பல்லவியைப் பாடுகிறார்.

அமைச்சர் பெருமக்கள் முதல் இந்தத் திட்டத்திற்கு செயலாற்றிய அதிகாரிகள் வரை அனைவருக்கும் நாம் கூறிக் கொள்வது என்னவென்றால், ஒரு முறை சென்னை மாநகரின் மையப் பகுதியில் இருந்து உங்கள் குடும்பத்தோடு மூட்டை முடிச்சுகளோடு சாதாரண மனிதனாக மாநகரப் பேருந்தில் பயணம் செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று வாருங்கள்; முதல்வர் அவர்களும், இந்த முயற்சியை மேற்கொள்ளலாம்.

அதேபோல், மாவட்ட அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் இருந்து, கிளாம்பாக்கத்திற்கு ஓர் அரசுப் பேருந்தில் ஏறி அதிகாலையில் வந்து சேர்ந்து, அங்கிருந்து மாநகரப் பேருந்தில் மீண்டும் பயணித்தால் எல்லாக் குறைகளையும், அவர்களே அனுபவபூர்வமாக உணரலாம். மாநகரப் பேருந்துகள் வெளியில் வரும்போது, பேருந்து நிலையத்தையும் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாய்வான தரை மாநகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளைப் பதம் பார்க்கும் வகையில் தான் இருக்கிறது. அப்படியே வேகமாகப் பேருந்தை இயக்கினால் படிக்கட்டு முழுவதும் நாசமாகப் போய்விடும் நிலை இருக்கிறது.

பேருந்துகளை இயக்கி வெள்ளோட்டம் எல்லாம் விட்டுப் பார்த்தவர்கள், எதைப் பார்த்தார்கள் என்பதே புரியவில்லை. இந்த அடிப்படைத் தேவையைக் கூட உணராமல், மேலிருந்து பார்த்தால் உதயசூரியன் போல் தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, கலைஞர் பெயரைக் கண்ட இடத்திலும் வைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு பேருந்து நிலையத்தை துவக்கி வைத்து மக்களை அலையவிட்டுக் கொண்டிருப்பது சரிதானா என்பதை சிந்தனையுள்ளோர் சிந்திக்கட்டும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மாற்றம், துக்ளக் அரசை நினைவுக்கு கொண்டு வருகிறது. தில்லி தலைநகரம் இல்லை, துக்ளக்காபாத்துக்கு புறப்படுங்கள் என்று உத்தரவிட்டதும், சரிவரவில்லை என்றதும் மீண்டும் தில்லிக்கு வாருங்கள் என்ற உத்தரவுகளும், நம் நெஞ்சில் நிழல் ஆடுகின்றன. வாய்ச்சவடால்களை விட்டுவிட்டு, அமைச்சர் பெருமக்கள் என்ற அடையாளங்களை எல்லாம் துறந்து சாதாரண மனிதனைப் போல பயணித்தால் உங்களுக்கும் உண்மை புரியும், மக்கள் படும் துயர்களும் தெரியும் என்று காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.

அன்புடன்

பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காமராஜர் மக்கள் கட்சி

One thought on “துக்ளக் அரசு நினைவுக்கு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *