இது செயலாட்சியா? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது!
07/05/24 ;இது செயலாட்சியா?
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என்று முதல்வர் நகைச்சுவை செய்து கொண்டு இருக்கிறார்.தமிழக அரசு டாஸ்மாக் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே, மக்கள் தண்ணீருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, வகை வகையான பீர் வகைகளை அறிமுகம் செய்வதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆஹா! இதுவல்லவோ திராவிட மாடல்!
கனிம வளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்யும் அடாவடிகள் எல்லை மீறிப் போய்க் கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த நிலையில் பலருக்கு உயிர் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக சர்வாதிகாரியாக மாறுவேன் என்று அவ்வப்போது முழக்கமிட்டு கொண்டிருக்கும் முதல்வர் எப்போது அந்த அவதாரத்தை எடுத்து தமிழக மக்களைக் காப்பாற்றப் போகிறார் என்பது தெரியவில்லை. காவல் நிலைய மரணங்களும் நிற்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்து உள்ளன.
வேங்கைவயல் நீர்த் தொட்டி சம்பவம் நடந்து நாட்கள் பல ஆகிவிட்டன. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது, காவல் துறைக்கு குதிரைக்கு கொம்பாய் இருக்கிறது. அமைச்சர் நேரு தம்பி இராமஜெயம் கொலை வழக்கு விசாரணை போல் ஆகிவிடும் போல் இருக்கிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன விளக்கம் தரப் போகிறார்?
திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் நெல்லை மாவட்டத் தலைவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என புகார் கடிதம் வெளியே தெரிய வந்துள்ள நிலையில், இன்று அவர் உயிருடன் இல்லை.
இது போன்ற பல்வேறு பிரச்சனைகளில், அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்கள் பாதுகாப்பிற்காகவும் பாடுபடுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும், ஆளும் கூட்டணியில் உள்ள போர்க்குணம் கொண்டோர், இன்று அமைதிப் படையாய் உலா வருவது ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது.கடந்த ஆட்சியில் நடந்த சட்ட மீறல்கள், பிறழ்வுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இன்றைய முதல்வர் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்திட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.