காமராஜர் பக்தர்களின் இதயத்தில் வேலைப் பாய்ச்சாதீர்கள்
17/05/2024
தமிழ்நாடு காங்கிரஸின் முன்னணித் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களைப் பின்பற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சொல்லின் செல்வர் சம்பத் அவர்களின் அருந்தவப் புதல்வர் திரு ஈ வெ கி ச இளங்கோவன் அவர்கள், ஸ்டாலின் ஆட்சி பற்றி அண்மையில் ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில், பல்லாண்டு பாடி இருக்கிறார்.
ஸ்டாலின் ஆட்சியும் காமராஜர் ஆட்சியும் ஒன்று என்று கூறினால், அவ்வாறு கூறுவோருக்கு, காமராஜர் ஆட்சி பற்றி எதுவுமே தெரியவில்லை என்றுதான் பொருள் கொள்ள முடியும். காமராஜர் ஆட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் எனறால் குறைந்தபட்சம் திரு கோபண்ணா அவர்களது புத்தகத்தையாவது வாங்கிப் படியுங்கள். காமராஜரின் 9 ஆண்டுகால பொற்கால ஆட்சியில், அவர் அமைத்துத் தந்த வலிமையான கட்டமைப்பு தான், கழகங்கள் ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கும் அத்தனைக் குறைபாடுகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
ஸ்டாலின் ஆட்சியை உங்களது சுயநலத்திற்காக வரம்பு இன்றி புகழ்ந்து பாராட்டு மழை பொழியுங்கள்; ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்காக வகை தொகை இன்றி வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, அவற்றை நிறைவேற்றாமல் உண்மைக்கு மாறாக உரைவீச்சு நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின் அவர்களின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று கூறி, பெருந்தலைவரைத் தெய்வமாக மதிக்கும் எண்ணற்ற காமராஜர் பக்தர்களின் இதயத்தில் வேலைப் பாய்ச்சாதீர்கள் என்று மட்டும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.