தண்ணீர்ப் பந்தல்களைத் தடுக்காதீர்!
1/05/2024; புதன் கிழமை
கோடையில் வெப்பத்தின் தாக்கத்தால் அவதியுறும் மக்களின் தாகத்தைத் தீர்க்க அரசியல் கட்சிகள் வைக்கும் தண்ணீர்ப் பந்தல்களைப் பிரிக்கும் மாபெரும் சேவையை சென்னைப் பெருநகர மாநகராட்சி செய்து வருகிறது. திருவொற்றியூரில் அதிமுகவும், இராயப்பேட்டையில் தமாகாவும் வைத்த தண்ணீர்ப் பந்தல்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன; அகற்றப்பட்டதற்கு காரணமாக தேர்தல் விதிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
ஆனால் திமுகவினர் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கின்றனர். அவற்றை எதிர்க்கட்சியினர் சுட்டிக் காட்டிய பிறகுதான் மாநகராட்சி அகற்றுகிறது. எதிர்க்கட்சியினர் தண்ணீர்ப் பந்தல்களைத் தானே முன்வந்து அகற்றும் மாநகராட்சி, ஆளும் கட்சி என்றதும் அடங்கிப் போய் விடுகிறது.
நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதை மாநகராட்சி நிர்வாகத்திற்கு யாராவது சுட்டிக்காட்டினால் தான் உரைக்குமா? என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்கிறது.
ஏப்ரல் 19ஆம் தேதி முடிந்த தேர்தலுக்கு, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 என்ற நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, மக்கள் நலப் பணிகளை செய்திட அரசு நிர்வாகம் தடையாக இருக்கக் கூடாது; மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் விதிகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவண் : பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர், காமராஜர் மக்கள் கட்சி