காமராஜர் மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கோவை மாநகரில் முக்கிய தீர்மானங்களுடன் நடைபெற்றது

01/07/2024

காமராஜர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் தலைமையில், கட்சியின் பொதுச்செயலாளர் திரு குமரய்யா அவர்களின் முன்னிலையில், மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொகுதி தலைவர்கள் பிற அணி நிர்வாகிகள் என கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டகோயம்புத்தூர் மாவட்டத்தின் கடந்த 30 6 2024 அன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

பொதுக்குழுவின் முதன்மை நிகழ்ச்சியாக தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் காமராஜர் மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார்.

மக்கள் அரசியல் என்ற தலைப்பில் காந்திகிராம பல்கலைக்கழக மேனால் பேராசிரியர் திரு தம் பழனித்துரை அவர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம், உள்ளாட்சித் தேர்தல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற எப்படி பணியாற்ற வேண்டும், உள்ளாட்சியில் மக்களுக்கு என்னென்ன பணிகளை செய்ய முடியும் ,மத்திய அரசின் பங்கீடு ,மாநில அரசின் பங்கீடு, உள்ளாட்சித் தலைவர்களின் அதிகாரங்கள், தலைமைப் பண்பு , நிதி ஆதாரம் பற்றிய விளக்கங்களும் ,உள்ளாட்சித் தலைமைக்கான பணிகள் என்னென்ன விளக்கமாக எடுத்துரைக்கும் கலந்தாய்வு கூட்டமும் நடைபெற்றது.

இதனை அடுத்து மதிய விருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது பின்னர் கட்சியில் பொதுக்குழு தொடங்கியது பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தீர்மானங்கள் மாநில தலைமை நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் பிற அணி நிர்வாகிகள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக தீர்மானங்களை வாசித்தனர் திருமணங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1.கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை தேவை 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளது. விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65க்கு மேல் உயர்ந்து விட்டது. நூற்றுக்கணக்கானோர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சென்ற ஆண்டு மரக்காணத்தில் விஷச் சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயத்தை தடுக்க உருப்படியான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. ஓராண்டுக்குள் மீண்டும் கள்ளச்சாராய சாவு மிகப் பெரும் எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதி அரசர் கோகுல்தாஸ் விசாரணை மேற்கொள்வார் என்றும், சிபிசிஐடி குற்றவாளிகளைக் கண்டறியும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.

இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை, மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆளுங்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில் முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிசிஐடி விசாரணையின் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள், அவர்களுக்குத் துணை நின்ற அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்கான நடைமுறைகளில் தமிழக முதல்வர் ஈடுபட வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

  2.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 
  பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி அதிகார வர்க்கத்தின் துணையோடும் பண பலத்தோடும் வெற்றி பெறுவதே வழக்கமாக உள்ளது. திருமங்கலம் தொடங்கி ஈரோடு வரை நடந்த இடைத்தேர்தல்களில் பணப்பரிவர்த்தனைகள், பரிசுப் பொருட்கள் வழங்குதல், வாக்காளர்களை பட்டியில் அடைத்தல் போன்ற பல்வேறு விதி மீறல்களை ஆளுங்கட்சி அரங்கேற்றி உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் அரசின் அமைச்சர்கள் அனைவரும் முகாமிட்டு கோடி கோடியாய் பணத்தை விநியோகிக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனப் பார்வையாளராகவே இருந்து வருகிறது. 3 ஆண்டு கால மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக, வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு வெற்றியைத் தேடித் தருவதன் மூலம் 2026 இல் திராவிட மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வழி வகுக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

   3.நீட் தேர்வு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்
   திருமதி இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலைக் காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றினார். அந்த நேரத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தன்னுடைய தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தத் தவறினார். 15 ஆண்டுகளுக்கு மேல் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த திமுக, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அதன் விளைவு மாநிலத்தின் கல்வித் துறையில் மத்திய அரசு தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. திமுக மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போது தான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் நீட் தேர்வை வலியுறுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது.

   இந்த நிலையில் தேசியத் தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வுகளில் பல குறைபாடுகளும், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் வெளிப்பட்டுள்ளன. தேசியத் தேர்வு முகமையின் தலைவரைப் பதவியில் இருந்து நீக்கியதுடன் போட்டித் தேர்வுகளை சீரமைப்பதற்காக ஏழு பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டால் பத்தாண்டு சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழல் மலிந்த மாநில அரசுகளின் செயல்முறைகளை, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மேற்கொண்ட பகற்கொள்ளைகளத் தடுத்து நிறுத்தப்படுவதற்காகவே மத்திய அரசு நீட் தேர்வை நடத்துகிறது என்ற நம்பிக்கை இன்று பறி போய்விட்ட நிலையில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே ஏற்புடையதாக இருக்கும் என்று காமராஜர் மக்கள் கட்சி செயற்குழு வற்புறுத்துகிறது.

    4.காவேரி – குண்டாறு – வைகை கால்வாய் இணைப்புத் திட்டத்தை உடனே நிறைவேற்றுக
    கரூர் கட்டளையிலிருந்து இராமநாதபுரம் வரும் வரை 250 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி,குண்டாறு,வைகை கால்வாய் இணைப்புத் திட்டம் மூன்று லட்சத்து 39 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதியும், வறட்சி மாவட்டங்களான இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகருக்கு குடிநீர் வசதியும் அளிக்கும். 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு இந்தத் திட்டத்திற்கு, 2008ல் திமுக அரசாங்கத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, மீண்டும் 2021ல் அண்ணா திமுக அரசாங்கத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த 16 வருடங்களாக முடிக்கப்படாமல் இருக்கின்றது. முடிக்கப்படாமல் இருக்கின்ற இத்திட்டத்தை முழுமையாக விரைந்து செயற்படுத்த வேண்டும் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

     5.தென் தமிழக மாவட்டங்களுக்கு வட்டார வளர்ச்சி வாரியம் ஏற்படுத்திடுக
     வேளாண்மைக்குத் தேவையான நீர் வளமும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்பேட்டைகளை அமைக்கத் தேவையான நிலங்களும், சுற்றுலாவை வளர்க்கக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், ஏற்றுமதியைப் பெருக்கக் கூடிய துறைமுக வசதிகள் இருந்தும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பின் தங்கிய நிலையில் உள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்த வட்டார வளர்ச்சி ஆணையம் (Regional Development board) மகாராஷ்டிரா,ஒரிசா,கர்நாடகா மாநிலங்களில் இருப்பது போன்று அமைக்கப்பட வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

      நிகழ்ச்சியின் இறுதியாக பொது குழுவில் கட்சி தொண்டர்கள் வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்து பின்னர் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் பேருரை வழங்கி பொதுக்குழு மற்றும் செயற்குழுவை சிறப்பித்தவர்களுக்கு நன்றி கூறியும் விழா நிறைவடைந்தது .

      கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவிற்கு பெரும் பங்கு வகித்த கோவை மண்டல தலைவர் திரு.தியாகராஜன் அவர்களுக்கு நன்றி கூறியும் மாவட்ட தலைவர் திரு நெடுமாறன் அவர்களை பாராட்டியும் விழா நிறைவடைந்தது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *