குழியும் பறித்த குதிரை

27/12/2024

கல்வித்தர வரிசையில் முன்னணியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர், இன்று ஒரு தரங்கெட்ட நிகழ்வால் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு நமது பல்கலைக் கழகங்கள், எந்த அளவு பாதுகாப்புக்கு உரியவை? எந்த அளவு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. குற்றவாளியை அடையாளம் கண்டபின் அவர் மீது 13 வழக்குகளுக்கு மேல் இருக்கின்றன, அவர் இப்படித்தான் சேலத்திலும் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு தொடர் குற்றவாளியை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டிய காவல்துறை, கண்ணை மூடிக்கொண்டு இருந்திருக்கிறதா என்ற கேள்வியும், நம் மனக்கண் முன் நிழல் ஆடுகிறது.

குப்புற தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மாணவியின் முழு விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியே கசியவிட்டுள்ளது, ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல் துறை என்று புகழ்கின்ற முதல்வரின் கூற்றை கேலிக்குரியதாக்கி உள்ளது.

சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பது, குற்றவாளிகளை கண்காணிப்பது, குற்ற வாய்ப்புகள் உள்ள சூழ்நிலைகளைக் கண்டறிவது போன்ற அடிப்படைக் கடமைகளை காவல்துறை சரிவர செய்யாததன் விளைவே, தமிழகம் எங்கும் அன்றாடம் நிகழும் குற்ற நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகக் கருத வேண்டி உள்ளது. ஆளும் வர்க்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் குற்றவேல் புரியும் பணியில் இருந்து காவல் தறையை விடுவித்து, அவர்களைத் தங்கள் துறை சார்ந்த கடமைகளை சரிவர செய்திட அரசு நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. அப்படி செய்திருந்தால் வேங்கைவயல் குற்றவாளிகளை இரண்டு ஆண்டுகள் கழிந்தும் தமிழக காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத சூழல் உருவாகி இருக்காது என்பதையும் காமராஜர் மக்கள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

திருமதி வள்ளி இரமேஷ்,மாநிலத் தலைவர் – மகளிர் அணி, காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *