தமிழக முதல்வர், மக்கள் மன்றத்தில் விளக்குவாரா?
11/01/25
தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்குப் புதிதாக இரயில் பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இத்திட்டம் வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் வந்துள்ளது. அதனால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாகக் கைவிட்டுள்ளது என்றும் இரயில்வே துறை சார்பில், தமிழகத்துக்கு செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் பின்தங்கியிருக்கும் தென் தமிழகத்தை வளர்த்தெடுக்க, மண்டல வளர்ச்சி வாரியம் மதுரையில் அமைக்கப்பட வேண்டும், தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி, தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இரயில்வே திட்டத்தை வேண்டாம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை மாற்றந்தாய் மனப்பான்மையாகவே கருத வேண்டி உள்ளது.

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலம் ஆக்குவதற்காக அயராது உழைப்பதாக கூறிக் கொள்ளும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி செல்லும் இரயில் பாதைத் திட்டம் வேண்டாம் என மறுதலித்ததற்கான காரணத்தை மக்கள் மன்றத்தின் முன்வைக்க வேண்டும்; இரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தராததற்கான காரணத்தையும் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
சீ கிருஷ்ணமூர்த்தி, மாநில முதன்மைச் செயலாளர்,காமராஜர் மக்கள் கட்சி.
