தேவை இல்லாத ஆணி
28/02/2025
“தொகுதி சீரமைப்பில் தமிழகம் நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்காக மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலில் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகள் பட்டியலைப் பார்த்தால், அது திமு கழகத்தின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப விடுக்கப்பட்ட அழைப்பாகவே தெரிகிறது.

பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் அல்லது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் பல்வேறு கட்சிகள் தவிர்க்கப்பட்டு, இவர்களின் பாடல் வரிகளுக்கு ஏற்ப நடனமாடுபவர்களுக்கு முன்னுரிமை அளித்து அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இது குறித்து ஏற்கனவே காமராஜர் மக்கள் கட்சி தனது ஆட்சேபனையை தெரிவித்ததுடன், உரிய விளக்கத்தையும் முதல்வர் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. இதுவரைக்கும் முதல்வர் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை.


மேலும், மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கோபால்சாமி அவர்கள் “நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து, அதற்கான குழு அமைத்து, அதன் பிறகு மறுவரையறை செய்வதற்கு எந்தப் பணிகளும் தொடங்கப்படாத நிலையில், தமிழகத்தின் தொகுதிகள் குறையும் என்ற வாதங்கள் பொருத்தம் அற்றவை” என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் போது, தான் கொடுத்த வாக்குறுதிகளில் 99% நிறைவேற்றி விட்டதாக கூறி விட்டுத் தற்போது 505 வாக்குறுதிகளில் 328 வாக்குறுதிகளை (அதாவது 65%) நிறைவேற்றி விட்டதாகக் கூறும் முதல்வர், தமிழகத்தின் ஆட்சி மொழி தமிழ்தானா என்று சந்தேகிக்கும் வகையில் அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில், அரசு நிறுவனங்களின் படிவங்களில் தமிழே இல்லாத சூழலை உருவாக்கிவிட்டு, அவற்றையெல்லாம் சீராக்காமல், தொகுதி மறுசீரமைப்பைக் கையில் எடுத்திருப்பது, மும்மொழிக் கொள்கையில் நாடகம் ஆடுவது என்று ஆரம்பித்திருப்பது தேவையில்லாத ஆணி; 2026 தேர்தலுக்கான பொய்ப் பிரச்சாரத்தை இப்பொழுதே முதல்வர் ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.


தொகுதி மறுசீரமைப்பைத் திட்டங்கள் தமிழக நலனுக்கு எதிராக இருக்குமானால், தமிழகத்தின் சார்பாக 39 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இண்டியா கூட்டணி, நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்க்கட்டும். அதுவரையில் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கையும், மது போதை கலாச்சாரத்தால் அதிகரித்து வரும் குற்றங்களையும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் பணியில், உள்துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன் பா குமரய்யா, மாநிலப் பொதுச் செயலாளர்.