ஆசியான் திட்டத்தில் மதுரை விமான நிலையத்தை இணைத்திடுக!
11/03/2025
ஆசியான் என்ற ஒருமித்த விமானப் போக்குவரத்து சந்தைக்கு, இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் தமிழகத்தில் திருச்சி மட்டுமே இடம் பெற்றுள்ளது; மதுரை இடம் பெறவில்லை. பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த, இறைவனின் எண்ணற்ற திருவிளையாடல்கள் அரங்கேறிய ஆன்மிகத் தலமான மதுரை இடம் பெறாதது, தமிழக மக்களுக்கு குறிப்பாகத் தென் மாவட்ட மக்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

நான்மாடக்கூடல் என்றும், கோவில் மாநகர் என்றும் புகழ் பெற்ற, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கள்ளழகர் திருக்கோவில், அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை போன்ற எண்ணற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ள மதுரை மண்டலத்தில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம் ஆசியான் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டால்,

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 10 நாடுகளுக்கும், சுற்றுலாப் பயணியர் சென்று வர கூடுதலாக விமான சேவைகளை இயக்கும் வாய்ப்பு கிட்டும். மதுரையில் இருந்து இராமேஸ்வரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி போன்ற தலங்களுக்கு செல்வதற்கும் வாய்ப்பாக அமையும்.

எனவே மதுரை மாநகரில் அமைந்துள்ள விமான நிலையம் ஆசியான் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டும். என்றைக்கோ வரப்போகும் பிரச்சனைகளுக்கு, இன்றைக்கே குரல் கொடுக்கும் தமிழக அரசு, இந்தத் திட்டத்தில் மதுரையை இணைப்பதற்கு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைமையும் இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் சுமூகத் தீர்வை ஏற்பட உதவியது போல், இதற்கும் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
சீ கிருஷ்ணமூர்த்தி,
மாநில முதன்மைச் செயலாளர்,
குரு அய்யல்ராஜ்,
மதுரை மாவட்டத் தலைவர்.


நன்றி தினமலர்

நன்றி தினமணி