தங்களின் கருத்துக்களை செவி மடுக்க இது போன்ற வாய்ப்புகளை அமைத்து தர வேண்டிய கடமை – மிக்க நன்றி
11/03/2025 ,
மதிப்பிற்குரிய ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கு,
வணக்கம்.🙏🏼
தங்களது நெருக்கடியான சூழலிலும் அண்ணன் தங்கவேலு அவர்களின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் மருத்துவர் ஜீவா நினைவேந்தல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள். தாங்கள் மேற்கொண்ட பொறுப்பை எவ்வித தொய்வும் இன்றி ஆத்மார்த்தமாக ஈடேற்றினீர்கள்.

தங்களது சொற்பொழிவு ஒவ்வொரு நபரையும்(திரு. ஜெகநாதன், திருமதி. கிருஷ்ணம்மாள், காந்தி, பாரதியார், வள்ளலார், ஜீவானந்தம் ) உள்வாங்கி எந்த அளவிற்கு பங்கேற்பாளர்களின் கருத்திற்கும், சிந்தனைக்கும், செயலுக்கும் கவர்ந்திழுக்க முடியுமோ அந்த அளவிற்கு உட்புகுத்தும் விதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக குக்கூ இளைஞர்கள் களச் செயல்பாட்டாளர்கள் அவர்களுக்கு முன் உதாரணமாக கவனத்தை ஈர்க்கும் வண்ணம் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுஇருந்தது.

அம்மா கிருஷ்ணம்மாள் தங்கள் சொற்பொழிவை பெரிதும் வியந்து பாராட்டினார். ” இவ்வளவு நீண்ட பிரவாகமான உரையை இதுவரை தான் கேட்டதே இல்லை எனவும் பீகார் நிகழ்வு, கீழ்வெண்மணி நிகழ்வுகளை நீங்கள் விவரித்த விதம் அவரை உறங்கவிடவே இல்லை என்றும் மீண்டும் அந்த காலகட்டத்திற்கு தன்னை அழைத்துச் சென்று அவற்றை கண் முன் நிழலாட வைத்தது” எனவும் மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டார்.

அதிலும் கீழ்வெண்மணி சம்பவம் இன்றும் அவரால் மறக்க முடியாத திரும்பத் திரும்பக் குறிப்பிடும் சம்பவம். அதனை தாங்கள் உணர்வு பொங்க குறிப்பிட்டது அவரை பெரிதும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். ஜீவா நினைவேந்தல் நிகழ்வு உங்கள் உரையும் அவருக்குள் பெருத்த உற்சாகத்தையும், சக்தியையும் கொடுத்துள்ளது.
தாங்கள் ஆதங்கப்பட்டது போல் தேசத்திற்காக, அதன் விளிம்பு நிலை மனிதர்களுக்காக தம் இளமை காலத்தை அர்ப்பணித்தது குறித்தும், அவர் புரிந்த தியாக வரலாறு பற்றி அறியாத குடிமக்களாக இருப்பதுவும் பெருத்த அவமானம், தேச துரோகம்.ஏதோ சில நல்லுள்ளங்களின் சிந்தனைக்கான நாளாக ஒரு நாளை அமைக்க முடிந்தது என்ற மனநிறைவைத் தந்ததாக இந்நிகழ்வும், தங்கள் வருகையும் அமைந்தது. காந்தியத்தின் கடைசி எச்சங்களை இந்த இளைய தலைமுறை அறிந்து கொள்ள அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்ற வேட்கையை இந்நிகழ்வு தூண்டியுள்ளது.



சிந்தனை, சொல், செயல் மூன்றும் முரணின்றி ஒரே நேர்கோட்டில் அமைய செயல்படும் தங்களை போன்றோர் ஒரு சிலரே உள்ளனர். தங்களின் கருத்துக்களை செவி மடுக்க இது போன்ற வாய்ப்புகளை அமைத்து தர வேண்டிய கடமையை செய்ய வேண்டும் என்ற உந்துதலை தங்கள் வரவு ஏற்படுத்தியுள்ளது. தாங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கும் தங்களின் ஈடுபாடுடன் கூடிய செயலுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்கி கொள்கிறேன். தாங்கள் ஈரோடு வரும் சமயம் தெரியப்படுத்தினால் அவசியம் வந்து தங்களைச் சந்திக்கிறேன்.
தங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
ஜெ.ஜெயபாரதி.
பெ ஜீவா அறக்கட்டளை தலைவர்
