திருத்தணியில் பெருந்தலைவரின் பெயரை நீக்கக் கூடாது காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
10/03/25
பொற்கால ஆட்சி என்றாலே அது பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிதான் என்று தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அந்த மாமனிதர் காமராஜரின் பெயரில், திருத்தணி ம பொ சி சாலையில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்பு வேலைகளை முடித்து திறப்பு விழா செய்யும் போது, ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள பெருந்தலைவரின் பெயரே மீண்டும் தொடர்ந்திட வேண்டும்.

மாறாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட முயற்சிப்பது வரம்புகளை, மரபுகளை மீறிய செயலாகும். தமிழக அரசின் நிர்வாகம் இந்த செயலை உடனடியாக விட்டுவிட்டு பெருந்தலைவர் காமராஜரின் பெயர் தொடரும் வகையில் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

பழைய கட்டுமானங்களை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்போது அவற்றிற்கு ஏற்கனவே சூட்டப்பட்டிருந்த பெயர்களையே தொடர வேண்டும் என்ற கொள்கை முடிவினை எடுத்து அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களை காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
அன்புடன்
பா குமரய்யா, மாநிலப் பொதுச் செயலாளர்.