84 மாதங்கள் கடந்த நிலையில் குடிநீர் தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உறங்கி கொண்டு இருக்கிறது
31/03/2025
காரைக்கால் நகரப்பகுதியில் “ஹட்கோ நிதி” உதவியுடன் ரூபாய் 49.45 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்து, 20லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர் தேக்கதொட்டி அமைக்கும் பணி 2018 ஜனவரி 10ந்தேதி துவங்கியது.

இப்பணி 9மாதங்களில் நிறைவுப்பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும் உறுதியளித்தனர். தற்போது 84மாதங்கள் கடந்த நிலையில் குடிநீர் தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உறங்கி கொண்டு இருக்கிறது.
2025 மார்ச் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விடுவோம்! என அதிகாரிகள் கூறினர், கடந்த காலங்களில் சொன்னது போல் ” இதுவும் கடந்து போகும்” என எண்ணத்தோன்றுகிறது.
காரைக்கால் மாவட்ட எல்லை பூவம் நண்டலாறு பாலத்தில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் விரயமாகிறது! இப்பகுதியில் தண்ணீர் தொடர்ந்து வெளியாகி கொண்டு இருப்பதால் பாலத்தின் வலிமை குன்றி போகும், பொதுப்பணி துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
