காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் – திட்டத்தை நிறைவேற்ற திருச்சியில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பின்னால் வந்த முதல்வர்களான திரு கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, திரு எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதும் நிதி ஒதுக்கப்படுவதும் என்று காலம் கடந்து கொண்டே இருக்கிறது.
காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் மாநிலத் திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தபோது இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டியதன் அவசியத்தையும் அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி அவர்களிடம் எடுத்துரைத்தார். திரு கருணாநிதி அவர்களும் அதற்கு செவி சாய்த்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும் மீண்டும் தொய்வையே இந்தத் திட்டம் சந்தித்தது.
திட்டத்தை தீவிரப்படுத்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் ஏற்படுத்தப்பட்டது கால்வாய் கட்டும் பணிக்காக அதிக நிதி தேவைப்பட்டதால் மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால், நிதி கோரப்பட்டது. அதுவும் கிடைக்கவில்லை. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக 65 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்தத் திட்டத்தில் காவிரி ஆற்றில் இருந்து தெற்கு வெள்ளாறு, வைகை, கிருதுமால் நதி, குண்டாறு வரை 262 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்து, உபரி நீரை கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தத் திட்டத்தை 3 கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. முதல்கட்டத்தில் கரூர் மாவட்டம் காவிரி மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 118.5 கி.மீ. தொலைவுக்கும், 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து வைகை ஆறு வரை 109 கி.மீ. தொலைவுக்கும், 3-ம் கட்டமாக வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதி வழியாக குண்டாறு வரை 34 கி.மீ. தொலைவுக்கும் கால்வாய் அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தை 2021 ஜனவரியில் அப்போதைய முதல்வர் பழனிசாமி, மீண்டும் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக காவிரி மாயனூர் கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை கால்வாய் அமைக்க மொத்தம் ரூ.6,941 கோடி தேவைப்பட்ட நிலையில், ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 11 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்ட ரூ.331 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் தொடங்கின.
அந்தப் பணி 3 ஆண்டுகள் கடந்தும் மந்தமாக நடந்து வருகிறது. சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியும் தொய்வடைந்துள்ளது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடும் இல்லாததால், அடுத்த கட்டப் பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமர்ப்பித்த தமிழக பட்ஜெட்டில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் 7 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்தத் திட்டத்தினால் 7 மாவட்டங்களில் 1,054 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, 1,09,962 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் ரூ.21,341 கோடி தேவைப்படும். இந்தத் தொகையை ஒரே காலத்தில் ஒதுக்கீடு செய்து 3 கட்டப் பணிகளையும் ஒரே நேரத்தில் தொடங்கினால் மட்டுமே, 10 ஆண்டுகளுக்குள்ளாவது கால்வாய்ப் பணியை முடிக்க முடியும். திமுக அரசு பொறுப்பேற்றதும் இந்த திட்டத்துக்கு மேலும் ரூ.200 கோடி ஒதுக்குவதாக அறிவித்தது. அந்த நிதியும் ஒதுக்கவில்லை. 2, 3-ம் கட்டப் பகுதிகளில் இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணியைக்கூட தொடங்கவில்லை.